உளுந்து
உளுந்து
உளுந்து - மருத்துவப் பயன்கள்
நோயின் பாதிப்பு நீங்க:
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
உடல் சூடு தணிய:
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக:
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
உளுந்து வடை:
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
இடுப்பு வலுப்பெற:
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
குழந்தைகளுக்கு:
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
பெண்கள்:
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.
உளுந்து சாதமும் எள்ளுதுவையலும் !!!
தேவையானவை:
பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பச்சரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும், உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவப்பாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயம் நான்கையும் மிக்சியில் பொடி பண்ணிக் கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் வடித்த சாதத்தை பரவலாகக் கொட்டி அதன் மேல் தயாராக உள்ள உளுந்துப் பொடியை உப்புடன் சேர்த்து தூவவும். வாணலியில் நெய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும். உளுந்து சாதம் எள்ளுத் துவையலுடன் சேர்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
எள்ளுதுவையல்
எள்ளுத்துவையலுக்கு கறுப்பு எள் 1/2 கப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் நன்றாக வெடிக்கும் வரை வறுக்கவேண்டும். அதனுடன் வறுத்த தேங்காய் துருவல் 1/4 கப். காய்ந்த மிளகாய் 4, பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
Comments
Post a Comment