வேறுபெயர்கள்: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி,காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.
கீழாநெல்லியின் மருத்துவக் பயன்கள்
மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.
கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்
1.மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
2.இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.
3.கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
4.தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
5.இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
6.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்
7.உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும்.
8.ரத்தசோகையைச் சரிசெய்யும் .
9.கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
10.மலட்டுத் தன்மையைப் போக்கும்.
11.சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
12.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
13.கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
மஞ்சள் காமாலை:
1.கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க மஞ்சக்காமாலை நிச்சயம் குணமாகும்.
2.கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
3.கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பையிலை சமன் அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவு, இளைஞ்யர்களுக்குக் கழற்சிக்காயளவு, சிறுவர்களுக்குச் சுண்டைக்காயளவு பாலில் பத்து நாள் கொடுத்துக் காரம் புளி நீக்கி, பால் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட காமாலை தீரும்.
4.கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சிறு உருண்டையாக்கி தினம் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும். அதிக கசப்பு என்று நினைப்பவர்கள் கீழா நெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து சிட்டிகை சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். மோரை நீர்மோராக பெருக்கி அதில் விழுதை கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.
கல்லீரலை சுத்தம் செய்யும்:
1.மாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி பெரியவர்கள் 30 மிலி அளவிலும், சிறுவர்கள் 15 மிலி அளவிலும் குடித்துவந்தால் கல்லீரல் சுத்தமாகும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுகள் வெளியேறும். கல்லீரல் பாதிப்பிலிருந்து எப்போதும் நம்மை பாதுகாப்பாக வைக்க கீழாநெல்லி உதவும்.
2.கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.
சர்க்கரை நோய்:
1.உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
2.தினமும் மூன்று வேளை உணவுக்கு முன்பு கீழாநெல்லி பொடியை அரைடீஸ்பூன் அளவு எடுத்துவந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும். சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்காமல் எடுத்துவந்தால் டயாலிஸிஸ் செய்வதிலிருந்து தப்பிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள் மருத்துவரது ஆலோசனையோடு இதை எடுத்துகொள்ள வேண்டும்
உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள்:
1.கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
2.கீழாநெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து 2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக் காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு, சுரம், தேக எரிச்சல் தீரும்.
3.உடலோடு உடல் உறுப்புகளும் உஷ்ணம் தாக்கினால் பாதிப்பை உண்டாக்கும். வயிற்றுப்புண் வயிற்றுக்கோளாறுகள் கூட அதனால் தான் உண்டாகிறது. உடல் உஷ்ணம், வயிற்றில் புண், வாயில் புண் போன்றவற்றை உணர்ந்தால் கீழாநெல்லி இலையை அரைத்துவிழுதாக்கி ஒரு டம்ளர் மோரில் அரை டீஸ்பூன் அளவு கலந்து இலேசாக உப்பு சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுபுண் குணமாகும். வயிற்று கோளாறுகள் நீங்கும்.
வயிற்றுப்புண்:
1 டம்ளர் மோரில், கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.
தலைவலி:
1.நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
2.கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும்.
2.ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.
பார்வை கோளாறு:
1.கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.
2.இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.
முடி வளர்ச்சி மற்றும் சரும பிரச்சினைகளுக்கு:
1.நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம் இது கீழாநெல்லி தைலமாகும்.
2.கூந்தல் பராமரிப்பிலும் கீழாநெல்லிக்கு தனி இடம் உண்டு.தலை உஷ்ணத்தால் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருப்பவரள் கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வு சட்டென்று நிக்கும். உடலில் சரும வியாதிகள் இருப்பவர்கள் கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள் ஓடிவிடும்.
3.அது மட்டுமில்லாமல், பித்தம் காரணமாக ஏற்படுகிற முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது.
ஹெப்படைட்டிஸ்-பி:
ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி நோய்களைக் குணப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், கல்லீரலில் சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இம்மூலிகை பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.
சொறி, சிரங்கு:
கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, நமச்சல், சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.
பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம்:
1.பெரும்பாடு என்னும் வெள்ளைப்படுதல் நோய்க்கு கைவைத்தியத்தில் கீழாநெல்லி நிச்சயம் உண்டு. கையளவு கீழாநெல்லி இலையை சாறு பிழிந்து சம அளவு நீர் சேர்த்து குடித்துவரலாம். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
2.கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.
அகத்தியர் குணபாடம்
சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் -பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
கீழ்வா யெனு நெல்லிக்கே!
என்று கீழாநெல்லியின் மகத்துவத்தை அகத்தியர் குணபாடம் விவரிக்கின்றது. இயற்கை, நோய்களைப் போக்கும் அதிஅற்புதமான மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இயற்கை நமக்களித்த மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தி, நோய், நொடி இல்லாமல் வாழ்வோம்.
சித்த மருத்துவத்தில் கீழாநெல்லி இலைகளை எந்தக் காரணத்துக்காகவும் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், இந்த மூலிகையில் உள்ள வேதிப்பொருட்களின் செயலாற்றும் தன்மை மெல்லமெல்ல குறையும். இந்த இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து 10 கிராம் அளவு வெள்ளாட்டுப்பால் அல்லது மோரில் கலந்து 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். இந்தக் கலவையைச் சித்த மருத்துவத்தில் ‘கற்கம்’ எனக் குறிப்பிடுவார்கள்.
நன்றாக வளராத கீழாநெல்லி இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, இம்மூலிகை குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமாவது வளர்ந்து இருக்க வேண்டும். இலைகளுக்குக் கீழே காய்கள் காணப்பட வேண்டும். அவ்வாறு வளர்ந்த கீழாநெல்லி இலைகளில்தான் Phyllanphin, Hypo Phyllanpin என்ற இரண்டு வேதிப்பொருள் உருவாகும். இதுதவிர, ஆல்கலாய்ட்(Alkaloid) என்கிற வேதிப்பொருளும் இந்த செடியில் இருக்கும்.
கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. கீழா நெல்லியை அரைத்து அப்படியே சாறாக்கி குடிக்கலாம். இதை முடக்கத்தான் போன்று தோசை மாவில் கலந்து தோசையாகவும் ஊற்றலாம். கீழாநெல்லியை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். வெந்நீரில் கலந்து குடிக்கலாம். கீழாநெல்லி வேரை மண் போக சுத்தம் செய்தும் பசும்பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.
மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய மூலிகைகள் உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'.
Comments
Post a Comment