இயற்கை மருத்துவம்



கண்டங்கத்திரி மூலிகை

1.   கண்டங்கத்திரி இலைகளைப் பறித்து சுத்தமாக்கி இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து இளஞ்சூட்டில் காய்ச்சி வடித்து பத்திரப்படுத்தவும். கோடைக்காலங்களில் நம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்க இந்தத் தைலத்தை உடல் முழுக்க மேற்பூச்சாக பயன்படுத்தலாம்.
 
2.   கண்டங்கத்திரி இலை சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி அதைதலைவலி, கீல்வாதம் போன்ற நோய்கள் குணமாக மேல் பூச்சாக பூசலாம். 

3.   கண்டங்கத்திரி இலை சாறுடன் சம அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி பூசி வந்தால் கால் பாதவெடிப்புகள் மறையும்.

4.  வெப்பமும் காரத்தன்மையுள்ள கண்டங்கத்திரி காய்களை உடைத்து விதைகளை நீக்கி சுத்தமாக்கி காரக்குழம்பு, சாம்பார் என் சமைத்து உண்ண, நெஞ்சில் சேர்ந்து உள்ள நாட்பட்ட சளியை அது வெளியேற்றும்.  குரல்வளையில் தேங்கியுள்ள சளியை நீக்கி சுவாசத்தை சீராக்குகிறது. இரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பு அடைப்புகளையும் நீக்கி சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

5.   கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி தூளாக்கி குறிப்பிட்ட அளவு தேனில் கலந்து சிறு குழந்தைகளுக்கு காலை மாலை என இரண்டு வேளைகள் கொடுத்தால் அவர்களின் நாட்பட்ட இருமல்குறைந்து குணமடைவார்கள்.

6.  இச்செடியின் பழங்களின் விதைகளை நெருப்பிலிட அதிலிருந்து புகை எழும்பும். அப்புகையை பற்களின் மேல் படும்படி செய்ய பல்வலி, பல்லரணை போன்ற நோய்கள் குணமாகும். 

7.    கண்டங்கத்திரி வேர், சுக்கு கலந்து கஷாயம் வைத்து பருக சாதாரண சுரம் நீங்கும். உடல் சோர்வு, அசதி மற்றும் உடல் தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம். 

8.   உடல்சூடு அதிகமாக இருக்கும் போது இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து தினமும் ஒருவேளை பருக நல்ல பலன் தெரியும். 

9.  கை, கால்களில் சாதரணமாக ஏற்படும் வீக்கங்களுக்கு கண்டங்கத்திரி விதைகளை நீரில் அறைத்து பற்றுபோட்டு குணங்காணலாம்.

10.  பழங்களை பறித்து வேகவைத்து கடைந்து மெல்லிய துணியில் பிழிந்து அந்த பசையை வெண்குஷ்டம் நோய்க்கு மேற்பூச்சாக பூசிவர குணமடையலாம்.
 
            இச்செடியின் இலைகள், ஊதா நிறப்பூக்கள், காய்கள், பழங்கள், வேர்கள் என் அனைத்தும் நமக்கு மருந்தாக பயன்படுகின்றன. இருமல், இரைப்பு, ஷயம், கபம், பல்லரணை, புடை நமைச்சல், மூக்கில் நீர் வடிதல், தலையில் நீர் சேர்தல் மற்றும் சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கவும், தொண்டை அடைப்பு, மூச்சடைப்பு இவற்றையும் நீக்கி நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது இந்த கண்டங்கத்திரி மூலிகை.

Comments

Popular posts from this blog

இயற்கை மருத்துவம்

அனைத்து கட்டிகளையும் கரைக்க

இயற்கை மருத்துவம்